சண்டிகர்:
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் நடந்து வந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். அவரது நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பகவந்த் மான் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமருகிறார்.
இவர் ஏற்கனவே பஞ்சாப்பில் உள்ள சங்ரூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். முதல்- மந்திரியானதால் அவர் நேற்று எம்.பி. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து பகவந்த் மான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பஞ்சாப்பில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பதவி ஏற்பு விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் இடம் 50 ஏக்கர் பரப்பளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் புறப்பட்டதால் அவர்களது வாகனங்களை நிறுத்த 50 ஏக்கர் பரப்பளவில் இடம் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த மாவட்டத்துக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக உயிர் துறந்த பகத்சிங் கடைசி நாளில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதை உணர்த்தும் வகையில் பதவி ஏற்பு விழாவிற்கு வரும் அனைவரும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து வர வேண்டும் என்று பகவந்த் மான் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதை ஏற்று விழாவிற்கு வந்திருந்தவர்கள் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து வந்திருந்தனர். இதனால் பகத்சிங் பிறந்த கிராமத்தில் இன்று எங்கு திரும்பினாலும் மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது. அந்த மாவட்டமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி கோலாகலமாக மாறியது.
இன்று மதியம் 1 மணி அளவில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்- மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
இன்று நடந்த விழாவில் பகவந்த் மான் மட்டுமே பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது என்பது பற்றி ஆலோசித்து முடித்தபிறகு புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.