புதுடெல்லி: அதிகாரத்தின் துணையுடன் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்கள் நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், “ அவையில் இன்று மிக முக்கியமான பிரச்சினையை எடுத்து வைக்க என்னை அனுமதித்ததற்கு நன்றி. நமது ஜனநாயகத்தை கைப்பற்ற ,சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்யும் அபாயம் அதிகரித்து வருகிறது.
அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் பினாமிக்கள் அவர்களின் அரசியல் கதைகளை வடிவமைக்க பேஸ்புக், ட்விட்டர் போன்ற உலகளாவிய நிறுவனங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான இடத்தை வழங்குவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை பொதுமக்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆளும் அதிகாரத்தின் துணையுடன் பேஸ்புக் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்கள் நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
தவறான தகவல்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் இளைஞர்கள், வயதானவர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். இதனை பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் அரசியலில், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
இது கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. யார் ஆட்சியில் இருந்தாலும் நமது ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.