அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் எஸ் எஸ் தேர்வில் பங்கேற்ற சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வர் ராவ் மற்றும் பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்திக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள், பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன்.
தமிழர் நலனுக்காகவும் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும் என உறுதி கூறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.