நியூயார்க்: உக்ரைன் – ரஷ்யா யுத்தக் களத்தில் ஃபாக்ஸ் செய்தி நிறுனத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
மூத்த வீடியோ கிராஃபரான பெய்ரி சாக்ர்ஷிவ்ஸ்கி (55), ஃபாக்ஸ் நியூசில் பணிபுந்து வந்த பெண் நிருபரான ஒலெக்சான்ட்ரா சாஷா குவ்ஷினோவா (24) ஆகிய இருவரும் உக்ரைன் போரில் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். இவர்களுடன் பயணம் செய்த மற்றொரு பத்திரிக்கையாளரான பெஞ்சமின் ஹால் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெய்ரி மற்றும் ஒலெக்சான்ட்ரா இருவரும் பெஞ்சமின் ஹாலுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறி வரும்போது அவர்களின் வாகனம் தீயில் சிக்கியது. இதில், பெஞ்சமின் தவிர மற்ற இருவரும் கொல்லப்பட்டனர்.
இருவரின் மரணத்தையும் உறுதிப்பாடுத்தியுள்ள ஃபாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூசன்னா ஸ்காட்,” ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் செய்திகளை தருவதற்காக உயிரைப் பணயம் வைக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இன்று ஒரு மோசமான நாள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மூத்த ஆவணப்பட வீடியோகிராபர் ப்ரென்ட் ரெனாட், கீவ் நகருக்கு வெளியே உள்ள இர்பின் பகுதியில் போர் குறித்து படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ரஷ்ய படைகள் நடத்திய நேரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மிக குறுகிய இடைவெளியில் மூன்று பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது, உக்ரைனில் நடக்கும் போரினையும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையும் உணர்த்துவதாய் இருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பென் அமெரிக்காவின் ஃப்ரீ எக்ஸ்பிரஷன் திட்டத்தின் இயக்குநர் சம்மர் லோப்ஸ், “உக்ரைனில் பத்திரிக்கையாளர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் தினமும் அதிகரித்து வருகின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் போர் மிகவும் உக்கிரம் அடைந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இருவரின் பின்புலம்: ஐரிஸ் குடிமகனான பெய்ரி சாக்ர்ஷிவ்ஸ்கி லண்டனில் வசித்து வந்தார். இவர் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் நடந்த மோதல்கள் நடந்தபோது, அங்கு ஃபாக்ஸ் நிறுவனத்திற்காக செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியப் பின்னர், அங்கிருந்த ஃபாக்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றியதற்காக அறியப்படாத நாயகன் (அன்சங் ஹீரோ) விருதை பெற்றார். பிப்ரவரியில் உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து அங்கு பணியாற்றி வந்தார்.
மற்றொரு நிருபரான ஒலெக்சான்ட்ரா சாஷா குவ்ஷினோவா போர் முனையை பற்றி நன்கு அறிந்திருந்த உள்ளூர்வாசி. அவர், ஃபாக்ஸ் குழு கீவ் பகுதியில் செல்வதற்கும், தகவலாளிகளுடன் உரையாடுவதற்கும், தகவல் சேகரிப்பதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தார். இசை, கலை, புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த குவ்ஷினோவாவுடன் நமது செய்தியாளர்கள், தயாரிப்பாளர்கள் நீண்டகாலம் பணியாற்றியுள்ளனர். உலகின் அனைத்து மக்களையும் சந்தித்து அவர்களின் கதைகளைச் சொல்ல வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. அதனை அவர் தனது செய்திகளின் மூலமாக செய்தார் என ஃபாக்ஸின் சிஇஒ ஸ்காட் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.