மதுரை: பெண்கள் கல்வியைத்தாண்டி தொழில்துறையில் தடம் பதிக்க வேண்டும் என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரை மங்கையர்கரசி கலை – அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இந்த விழாவில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசியது: ” நாங்கள் அரசியல் செய்வது எல்லாம் ஒரே காரணத்திற்காகத்தான் அதன் அடிப்படை கொள்கை தத்துவம், சுயமரியாதை,சமூக நீதி ,எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை இந்த மாதிரி தத்துவங்களை சட்டமாக அதனை திட்டமாகக் கொண்டு வந்து நாட்டை மாற்றுவதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம்.
சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எந்த ஒரு சமுதாயத்திலும் பெண்களுக்கு எந்த அளவிற்கு கல்வி, சொத்துரிமை, வேலை வாய்ப்பு கிடைக்கிறதோ அதுதான் அந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை, பாதையை தீர்மானிக்கும். அந்த ஒரு வேற்றுமையினால் தமிழகம், இந்திய சராசரியை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறது.
ஏனென்றால் 1920-ம் ஆண்டு திராவிடக் கட்சிகளின் தந்தையான நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு சட்டரீதியாக வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதேபோல் கட்டாயக்கல்வி ஆண்களுக்கும் பெண்களுக்கும் 1920-ல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு நம் மாநிலம் இந்த நிலையை அடைந்து இருக்கிறது. அத்தகைய மகளிர் கல்லூரிக்கு சென்று ஊக்கமளிக்க்க வேண்டும் என்பதற்காக இங்கு வருகை தந்தேன்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முடிந்து வந்தவர்கள் 50 சதவீதம் பெண்கள் இன்றைக்கு மக்கள் தொகையிலும் 50 சதவீதம் மேல் பெண்கள் கல்லூரிக்கு செல்கிற போது அந்தக் கணக்கு மாற ஆரம்பித்து இருக்கிறது . தனியார் பள்ளிகளில் படிக்கிற 96 சதவீதம் பெண்கள் கல்லூரியில் சேர்கிறார்கள். ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 46 சதவிகிதம் பேர் தான் கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற ஏற்றத்தாழ்வு தெரிய ஆரம்பிக்கிறது.
என்னுடைய கோரிக்கை எல்லாம் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய நீங்கள் எந்த அளவு கல்வி கற்பது முக்கியமோ, அதனை விட முக்கியம் ஏதாவது ஒரு தொழில் துறையில் நீங்கள் தடம் பதிக்க வேண்டும். நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் உதவி செய்து பொருளாதார அளவில் வளர்ச்சி அடைந்து நாட்டின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் துணை நிற்க வேண்டும் .
பெண் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.பெண்கள் அதிகமாக பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து செய்வோம். கல்வி கற்பதோடு நின்று விடாமல் வேலைவாய்ப்பில் தொழிற் துறையில் பங்கேற்று உற்பத்தி திறனை உயர்த்துகிற வகையில் செயலாற்றுங்கள்” என்று அவர் கூறினார்.