மவுன்ட் மாங்கானு,
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா 8 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், சிநேஹ் ராணா ஆகியோர் சொர்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் ஸ்கோர் சரிவு பாதையில் சென்றது.
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென விழ, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் 33 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவருக்கு பக்கபலமாக ஆல் ரவுண்டர் ஜூலன் கோஸ்வாமி 20 ரன்கள் எடுத்தார்.இருவரும் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.
இறுதியில் இந்திய மகளிர் அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் டாமி பியூமண்ட் மற்றும் டேனியல் வியாட் ஆகிய இருவரும் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
எனினும், 3வது விகெட்டுக்கு ஜோடி சேர்ந்தஅந்த அணியின் கேப்டன் ஹீத்தர் நைட் மற்றும் நடாலி சிவெர் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
சிறப்பாக விளையாடிய ஹீத்தர் நைட் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.அவருக்கு பக்கபலமா நடாலி சிவெர் 45 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 31.2 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக மேக்னா சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பணிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் படுமோசமாக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.