அமிர்தசரஸ்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார்.
இந்த நிலையில், பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்று கொண்டார்.
இந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை-முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழா கோலாகலம் பூண்டுள்ளது. பக்வந்த் மான் பதவியேற்பு நிகழ்ச்சியில், மஞ்சள் நிற தலைப்பாகை உடன் தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் மட்டுமின்றி, மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, பகவந்த் மான் மற்றும் பிற தலைவர்களும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து இருந்தனர்.