பெங்களூரு : உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் புலிகள் வனப்பகுதிக்கு கர்நாடகாவின் பெண் யானைகளை அனுப்ப மாநில அரசு மறுத்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் புலிகள் வனப்பகுதி, 603 கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு 20 முதல் 28 புலிகள் உள்ளன. இவற்றில் சில, வனப்பகுதியை விட்டு வெளியே வந்து உணவு தேடுகின்றன.குறிப்பாக, பெண் புலிகள், தமது குட்டியை பாதுகாக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள கரும்பு தோட்டத்தையே விரும்பும். இதனால் மனிதர்களை புலிகள் தாக்கும் சம்பவம் நடக்கிறது.
இதை தடுக்க, கர்நாடகாவிலிருந்து பயிற்சி பெற்ற யானைகள் மூலம், புலிகளை வனப்பகுதிக்குள் விரட்ட, அம்மாநில வனத்துறையினர் முடிவு செய்தனர்.இதையடுத்து, கடந்த மாதங்களுக்கு முன், பிலிபிட் புலிகள் வனத்துறையினர், கர்நாடகாவின் ராம்நகர், நாகரஹொளே, ஷிவமொகா யானைகள் முகாமுக்கு வந்து, ஆறு பெண் யானைகளை தேர்வு செய்தனர்.ஆனால் கர்நாடக அதிகாரிகள், பெண் யானைகள் அதிகளவில் இல்லாததால், கொடுக்க மறுத்து விட்டனர்.
இது குறித்து, பிலிபிட் புலிகள் வனப்பகுதி மண்டல வன அதிகாரி நவீன் கந்தேல்வால் கூறுகையில், ”தனியாக சுற்றித்திரியும் புலிகளையும், அடர்ந்த கரும்பு வயலுக்குள் மறைந்திருக்கும் புலிகளையும் கண்டுபிடிக்க, யானை தேவை.”தற்போது வரை, துத்வா புலிகள் வனப்பகுதியிலிருந்து மனிதர்களை தாக்கும் புலிகளை பிடிக்க அழைத்து வருகிறோம். ஆனால், கர்நாடக அதிகாரிகள், எங்கள் கோரிக்கையை நிராகரித்தது வருத்தமளிக்கிறது,” என்றார்.
Advertisement