மும்பை: ரூ. 21 லட்சம் கடன் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பாவின் தாயாருக்கு மும்பை நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பர்ஹாத் அம்ரா என்பவர் மும்பை நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தந்தை சுரேந்திர ஷெட்டி, அவரது தாய் சுனந்தா, சகோதரி ஷமிதா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் பெற்றோர் தொழிலதிபரிடம் ரூ. 21 லட்சம் கடன் பெற்றுள்ளனர். ஆனால், அந்த கடனை அவர்கள் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக பர்ஹாத் அம்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இடையே ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா ஷெட்டி இறந்துவிட்டார். இருந்தும் பர்ஹாத் அம்ரா நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஷில்பா ஷெட்டியின் பெற்றோர் இருந்துள்ளனர். அதனால் தன்னிடம் வாங்கிய கடனுக்கு, சுரேந்திர ஷெட்டியின் வாரிசுகளான அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் பொறுப்பு என்று மனுவில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான் குற்றம்சாட்டப்பட்ட ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா மற்றும் சகோதரி ஷமிதா ஆகியோருக்கு எதிராக சம்மன் அனுப்பினார். ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் சம்மனை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதையடுத்து செஷன்ஸ் நீதிபதி ஏஇசட் கான், ‘ஷில்பா மற்றும் ஷமிதாவுக்கு எதிரான மாஜிஸ்திரேட்டின் உத்தரவை நிறுத்தி வைத்தார்; ஆனால் அவரின் தாயாருக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மேலும், சுனந்தா ஷெட்டி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு எதிராக வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.