சென்னை:
டெல்லியில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் என தனித்தனியே அலுவலகம் உள்ளது. அந்த வகையில் தி.மு.க.வுக்கும் பிரமாண்டமான அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.
அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த அலுவலகம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளது.
இதற்காக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
ஏப்ரல் 2-ந் தேதி டெல்லி செல்ல உள்ளார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் டெல்லி செல்கிறார்கள்.
தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைப்பதற்கு தி.மு.க. முடிவு செய்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் டி.ஆர்.பாலு தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் மேற்கொண்டு உள்ளனர்.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இடையே இதுவரை முழுமையான ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை.
அந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சில மாநில தலைவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்தநிலையில் அடுத்த மாதம் நடக்கும் டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழா நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் விழாவாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தி.மு.க. விழாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய அரசியலில் அனைவரது பார்வையும்
மு.க.ஸ்டாலின்
மீது திரும்பி உள்ளது.
மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சியால் மட்டுமே டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 தடவை டெல்லி சென்று உள்ளார். 3-வது முறையாக அவரது டெல்லி பயணம் முத்திரை பதிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளன.