மும்பை,
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 27-ந்தேதி எதிர்கொள்கிறது. இதற்காக, டெல்லி அணியின் வீரர்கள் தற்போதே மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பயணிப்பதற்காக அந்த அணி சார்பில் சொகுசு பஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பஸ் தற்போது மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ளது.
இந்நிலையில், மும்பையின் கொலபா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பஸ் மீது நேற்று இரவு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பஸ்சின் கண்ணாடி மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பஸ் மீது தாக்குதல் நடத்திய மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.