தேர்தலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம்..!! – மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,  
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் 2-வது அமர்வின் 3ஆவது நாள் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 
இந்நிலையில் தேர்தலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 
இதுதொடர்பாக மக்களவையில் பூஜ்ய நேரத்தில் அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசிய அவர், “நமது ஜனநாயகத்தை ஹேக் செய்ய சமூக ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் அதிகரித்து வரும்நிலையில், மிக முக்கியமான பிரச்சினையை எடுத்துக் கொள்ள என்னை அனுமதித்ததற்கு நன்றி. தலைவர்கள், கட்சிகள் மற்றும் அவர்களின் பினாமிகளால் அரசியல் கதைகளை வடிவமைக்க பேஸ்புக் மற்றும் டுவிட்டர் (FB & Twitter) போன்ற உலகளாவிய நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. 
மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பாஜகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு பேஸ்புக் சலுகைகளை வழங்கியது.
இளம் மற்றும் முதியவர்களின் மனங்கள் உணர்ச்சிவசப்பட்ட தவறான தகவல் மூலம் வெறுப்பால் நிரப்பப்படுகின்றன. பேஸ்புக் போன்ற ப்ராக்ஸி விளம்பர நிறுவனங்கள் அதை உணர்ந்து லாபம் ஈட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள், ஆளும் ஸ்தாபனங்கள் மற்றும் பேஸ்புக் போன்ற உலகளாவிய சமூக ஊடக ஜாம்பவான்கள் வளர்ந்து வரும் பிணைப்பை இந்த அறிக்கை காட்டுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான தேர்தல் அரசியலில் பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் முறையான செல்வாக்கு மற்றும் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். இது கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. யார் ஆட்சியில் இருந்தாலும் நமது ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.