வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் இன்று 21-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றியுள்ள எல்லைகளில் இருந்து ரஷிய படைகள் அந்நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியவில்லை. இதனால் சில நாட்களாகவே கீவ் நகரில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு சரமாரியாக ஏவுகணை, வான்தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்கின்றன. அந்த நாடுகளின் பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றி, தொடர்ந்து ஆதரவு நல்கும்படி கேட்டவண்ணம் உள்ளார்.
அவ்வகையில் இன்று காணொலி வாயிலாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தில் உள்ள திரையில் ஜெலன்ஸ்கி தோன்றியதும், உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்று ஆதரவு அளித்தனர்.
பின்னர் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவு தொடர்பான வீடியோவை காட்டி மிகவும் உருக்கமாக பேசினார் ஜெலன்ஸ்கி.
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார் ஜெலன்ஸ்கி. மேலும், உக்ரைனின் நிலத்தின் மீது மட்டுமல்ல, சுதந்திரமாக வாழும் உரிமைக்கு எதிராகவும் ரஷ்யா போரிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகள், உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ரஷியாவால் எங்கள் நகரங்களை பயமுறுத்த முடியாது, என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நோக்கி பேசிய ஜெலன்ஸ்கி, “நீங்கள் உலகத்தின் தலைவராக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். அமைதியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள்” என்றார்.