தி ஹேக்:
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷிய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ள என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பிரிவினைவாத கிழக்குப் பகுதிகளான லுகான்ஸ்க், டோனட்ஸ்கில் இனப்படுகொலை நடப்பதாக கூறியும், அதற்கு தண்டனை வழங்குவதை நோக்கமாக கொண்டும் பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுகள் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இந்த தீர்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. அதன் உத்தரவுக்கு ரஷியா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் சர்வதேச அரங்கில் ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் என்று ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா வீட்டோ அதிகாரம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.