வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி மூலமாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி, ”ரஷ்யாவிற்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் புதன்கிழமை காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது அவர், உக்ரைன் தாக்குதலை, ’பேர்ல் ஹார்பர்’ மற்றும் ’செப்டம்பர் 11’ தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பாகவும், பேசி முடித்த பின்னரும் நாடாளுமன்றத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.
இந்தப் பேச்சின்போது, ரஷ்யத் தாக்குதலால் தனது நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் அழிவுகளின் உணர்ச்சிகரமான வீடியோக்களைக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ”உக்ரைனின் வான் பரப்பை ரஷ்யா ஆயிரக்கணக்கான உக்ரைனிய மக்களுடயை மரணத்திற்கான ஆதரமாக மாற்றியுள்ளது. அமெரிக்க மேலும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதரத் தடைகளை விதிக்க வேண்டும். அந்நாட்டுடனான அனைத்து வணிகங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
ரஷ்யா எங்களை மட்டுமல்ல, எங்கள் நிலத்தையும், எங்கள் நகரங்களையும் மட்டுமல்ல, எங்கள் மதிப்புகளுக்கு எதிராகவும், சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமைக்கு எதிராகவும், தேசிய கனவுகளுக்கு எதிராகவும் கொடூரமான தாக்குதலைத் நடத்தியது. இந்த மோதல் கடந்த 80 ஆண்டுகளாக ஐரோப்பா கண்டிராத பயங்கரவாதம். வருமானத்தை விட அமைதி மிகவும் முக்கியம்.
ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்க, நேச நாடுகள் தங்களின் வானில் வெளிப்பரப்பை நோ ஃப்ளை ஜோன் அறிவிக்க வேண்டும்” என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, ”எங்களுக்கு இப்போது நீங்கள் தேவை. அமெரிக்காவின் அமோக ஆதரவிற்கு நன்றி. இன்னும் பலவற்றைச் செய்வதற்காக நான் உங்களை அழைக்கிறேன்” என்றார்.