மதுரை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உள்பட 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. ஸ்ரீதர் உட்பட 9 பேரும் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய பலர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் பலமுறை தள்ளுபடியானது.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இருப்பினும் மொத்தமுள்ள 105 சாட்சிகளில் 22 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். நான் 20 மாதங்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறேன். விசாரணை முடியும் வரை சிறையில் அடைப்பது சட்டவிரோதம். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.