தேனி அருகே நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும்; சாயல்குடியில் உரத்தொழிற்சாலை அமைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, பார்லிமென்ட்டில் தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராஜ்யசபாவில், தி.மு.க., – எம்.பி., சிவா: நியூட்ரினோ திட்டத்தினால் தேனி மற்றும் சுற்றுப்புறங்களில் மேற்குதொடர்ச்சி மலையின் இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் சரணாலயம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும். பூமியை குடைவதற்காக பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படும்போது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். இதை தடுத்து நிறுத்தும்படி, தமிழக முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இதில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.முக., – எம்.பி., சண்முகம்: மத்திய, மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் இணைந்து செயலாற்றும் வகையில், பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். அவர்களுக்கு, போதுமான மீட்பு சாதனங்கள் வழங்க வேண்டும்.தி.மு.க,, – எம்.பி. வில்சன்: பேரிடர் பாதிப்பு அதிகமுள்ள, தமிழகம் போன்ற கடலோர மாநிலங்களுக்கு கூடுதல் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் மரணங்கள் அதிகரிப்பதால், அதற்கான மீட்பு சாதனங்கள் வாங்க வேண்டும்.
லோக்சபாவில் தர்மபுரி எம்.பி., செந்தில்குமார்: ரயில்வே முன்பதிவுக்கான இணையதளத்தில், திவ்யாங்’ என்ற வார்த்தை உள்ளது. இது, மாற்றுத்திறனாளிகளை குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை.அதிகபட்சமாக, 14 ஆயிரம் பேர் மட்டும் அறிந்த மொழியில் இந்த வார்த்தை அவசியமா. மாற்றுத்திறனாளிகளை குறிக்க, ஆங்கிலம் அல்லது அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற மொழிகளில் இருந்து பொருத்தமான வார்த்தையை தேர்வு செய்ய, ரயில்வே அமைச்சகம் முன்வர வேண்டும்.
திருவண்ணாமலை எம்.பி., அண்ணாத்துரை: தமிழகம் உள்பட நாடு முழுதும் உள்ள விவசாயிகள் உரத்தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க உள்ளதாக கூறும் மத்திய அரசு, மானிய விலையில் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை எம்.பி., கார்த்தி: ‘ஸ்விக்கி, ஊபர், ஓலா, ஜொமாட்டோ’ போன்ற, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களிடம் சொந்த வாகனங்கள் இல்லை. பணியாளர் நிலையும் அதுவே. இதனால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. விதிமீறி செயல்படும் இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி: மத்திய தொகுப்பிலிருந்து உரம் வராததால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து மூலப்பொருட்களை எளிதில் கொண்டு வரலாம் என்பதால், சாயல்குடியில் உரத்தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
இலவச அரிசியால் கூடுதல் நிதிச்சுமை
தூத்துக்குடி எம்.பி., கனிமொழி: ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 20 கிலோ இலவச அரிசி திட்டம் அமலில் உள்ள தமிழகத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை செயல்படுத்துவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது. இதில் உள்ள சிக்கல்களை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது டில்லி நிருபர் –