திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடந்து அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 3.20 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி வழக்கமாக இரவு 7 மணிக்கு நடைபெறும் ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோவிலிலும் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்….
48 நாட்கள் நரசிம்ம பிரபத்தி படித்தால் கைமேல் பலன்