நடுங்கிய இந்திய அணி! உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இலங்கை… இதே நாளில் நிகழ்ந்த சரித்தரம்


சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு (1996) இதே மார்ச் 17ல் லாகூரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது இலங்கை.

அதுவரை கத்துக்குட்டிகளாக அறியப்பட்டவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என எல்லா நாடுகளையுமே அலறவைத்து அழவைத்தார்கள். இலங்கையை வெல்வதே 90-களின் இந்திய அணிக்கு மாபெரும் லட்சியமாகிப்போனது.

90-களில் இலங்கை கிரிக்கெட் அணியைப் பார்த்தாலே இந்திய ரசிகர்கள் கொலைவெறியாவார்கள். காரணம் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானத் தோல்விகளைப் பரிசளிக்கும் அணியாக இருந்தது இலங்கை, இந்திய அணிக்கும் இலங்கையை பார்த்தால் நடுக்கம் தான். அந்தளவுக்கு மிக சிறப்பான வீரர்கள் அந்த காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக ஆடினார்கள்.

1996 உலகக்கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நடத்தின.

மார்ச் 17,1996.. அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டி. இதில் சென்சுரி அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று இலங்கைக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்தார் அரவிந்த டி சில்வா.

அப்போதைய இலங்கை அணியில் வீரர்களுக்குப் பெரிய சம்பளங்கள் கிடையாது.
ஆனாலும் நாட்டுக்காக கோப்பை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் இலங்கை வீரர்கள் ஆடினார்கள்.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை அடித்தது. அவுஸ்திரேலிய அணியில் மார்க் டெய்லர் 74 ரன்களும், ரிக்கி பாண்டிங் 45 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 46.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 245 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா அதிகபட்சமாக 107 ரன்களை அடித்தார்.

இந்த வெற்றி மூலம் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரை வென்றது இலங்கை அணி.
இந்தத் தொடரில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 523 ரன்களை எடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் மார்க் வாக் 484 ரன்களுடனும் 2 ஆவது இடத்தை பிடித்தனர், இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா 448 ரன்களுடனும் 3 ஆவது இடத்தை பிடித்தனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.