சமீபத்தில் வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய கிராவல் குவாரி பிரமுகரை விசாரணை வளையத்தில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. முதற்கட்ட விசாரணையின்போது, “கடந்த ஆட்சியில் கோலோச்சிய மணியான முன்னாள் அமைச்சரும், வடமாவட்ட முன்னாள் அமைச்சரும் என் மூலமாக குவாரில் தொழிலில் பெரும் முதலீடு செய்திருக்கிறார்கள்” என்ற தகவலைக் கக்கியிருக்கிறார் அந்த குவாரி பிரமுகர். இந்தத் தகவலை டெல்லிக்கு நோட் போட்டுவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கிறதாம் அமலாக்கத்துறை. டெல்லி சிக்னல் காட்டிவிட்டால், அந்த இரண்டு முன்னாள் மாண்புமிகுக்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ கொடுக்க வேண்டிவரும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மார்ச் 15-ம் தேதி காலை, முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இரண்டாவது முறையாக திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே, அ.தி.மு.க-வை குறிவைத்து ரெய்டு நடத்தப்படலாம் என்கிற தகவல் கட்சிக்குள் பரவ… வடமாவட்ட தடாலடி முன்னாள் அமைச்சர் தரப்பு கடும் கலக்கத்தில் இருந்துள்ளது.
மேலும், ரெய்டு பயத்தில் பெங்களூரு மற்றும் புட்டப்பர்த்தி ஆகிய பகுதிகளுக்கு கார்களில் சில முக்கிய ஆவணங்களையும் அந்த மாஜி அனுப்பிவைத்துவிட்டாராம். ஒருவழியாக வேலுமணி வீட்டில் ரெய்டு என்கிற தகவல் வெளியான பிறகுதான் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார் அந்த மாஜி!
அமைச்சர் சக்கரபாணிக்கு அவரின் சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில் அரசியல் போட்டி அதிகம் என்பதால், பழநியை தனி மாவட்டமாக அறிவிக்க காய்நகர்த்திவருகிறாராம். அப்படி செய்தால், பழநி மாவட்டத்தில் கோலோச்சலாம் என்பது அவரின் கணக்கு. அத்துடன் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள்… ‘‘முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவுக்கு பழநி மிகவும் பிடித்தமான கோயில்.
அவர் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் பழிநி முருகனுக்குப் பல வேண்டுதல்களை வைத்திருந்தார். எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அறிவிக்கப்போகும் புதிய மாவட்டங்களில் பழநியும் இருக்க வேண்டும் என்று சென்டிமென்ட்டாக அவரும் விரும்புகிறார்” என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.
வட மாவட்ட மாநகராட்சி ஒன்றில் பதவியேற்ற சூட்டோடு அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அவசர கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருக்கிறது மேயர் தரப்பு. அந்த மீட்டிங்கை யாரும் ரெக்கார்டு செய்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக, ஒப்பந்ததாரர்களின் செல்போன்களை வெளியிலேயே வாங்கிவிட்டுத்தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். கூட்டம் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே, ‘‘வளவளனு பேச விரும்பல. எல்லா வேலையிலும் அஞ்சு பர்சன்ட் கமிஷன் வந்துடணும்…” என்று கறார் காட்டியிருக்கிறார் மேயர் சார்பில் பேசிய அவரின் நெருங்கிய உறவினர். அதிர்ந்துபோன ஒப்பந்ததாரர்கள், ‘‘ஏற்கெனவே மேலிடத்துல 18 பர்சன்ட் கொடுத்துட்டுதான் வேலையை வாங்கியிருக்கோம்.
திரும்பவும் அஞ்சு பர்சன்ட் கொடுத்தா வேலையை எப்படி தரமா முடிக்க முடியும்… அதுல எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று புலம்ப… மேயர் தரப்போ, “எனக்கா கேட்குறேன்… அமைச்சர் சொல்லித்தான் கேட்குறேன்!” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்!
தொழில் நகரங்களான கரூர் மற்றும் கோவையில் கொரோனா ஊரடங்கு, மூலப்பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க… தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக்குச் சிறப்பாக செயலாற்றியதாக கரூர் நகரத்துக்கு முதல் பரிசையும், கோவைக்கு இரண்டாவது பரிசையும் வழங்கியிருக்கிறது தமிழக அரசு.
இதுபற்றி பேசும் உள்ளூர் கட்சி நிர்வாகிகளோ, ‘‘அரசியல்ரீதியாக மட்டுமல்ல… நிர்வாகரீதியாகவும் கரூர், கோவை ஆகிய மாவட்டங்களை சிறப்பாக மாற்றிக் காட்டியிருக்கிறேன்’’ என்று தலைமையிடம் காட்டவே செந்தில் பாலாஜி லாபி செய்து, இந்த விருதுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று கிசுகிசுக்கிறார்கள்!
உள்ளாட்சித் தேர்தலில் பதவியைப் பிடிக்க பலரும் முட்டி மோதிய நிலையில், கட்சித் தலைமை வற்புறுத்தியும் ஊட்டி நகராட்சியின் துணைத் தலைவர் பதவி வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார் ஊட்டி நகர தி.மு.க செயலாளர் ஜார்ஜ். இத்தனைக்கும் அவர் துணைத் தலைவர் பதவியை குறிவைத்துதான் கவுன்சிலராக வெற்றிபெற்றார். அவர் விரும்பியதுபோலவே துணைத் தலைவர் பதவியும் தேடி வந்தது. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை… எம்.பி ஆ.ராசா மூன்று முறை இவரிடம் வற்புறுத்தியும்கூட பதவி வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்.
இதன் உள்விவகாரத்தை விசாரித்தால், “நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாணீஸ்வரிக்கும் இவருக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டுவிட்டது. அதனால், அவருக்குக் கீழே துணைத்தலைவராக இருக்க அவர் விரும்பவில்லை” என்கிறார்கள் ஊட்டி உடன்பிறப்புகள்!
தி.மு.க தொண்டரைத் தாக்கிய வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவருகிறார்.
திருச்சியில் மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கும் ஜெயக்குமார் கட்சி நிர்வாகிகளிடம், ‘‘லட்சக்கணக்குல காசை செலவு பண்ணி உடம்பு குறையலையேன்னு நிறைய பேர் வருத்தப்படுறாங்க. அவங்க எல்லாம் 15 நாள் ஜெயில்ல இருந்துட்டு வந்தாங்கன்னா, ஈஸியா உடம்பு குறைஞ்சுடும். ஜெயில்ல சரியான சாப்பாடு இல்லாம எனக்கே ஏழு கிலோ குறைஞ்சுடுச்சி’’ என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, “தலைவரு இந்த விஷயத்தை சந்தோஷமா சொல்றாரா, வருத்தமா சொல்றாரா?!” என்று கமென்ட் அடிக்கிறார்கள்!
இதுவரை திருச்சியில் கோலோச்சிவந்த அமைச்சர் கே.என்.நேரு, இப்போது தஞ்சாவூரிலும் அரசியல் செய்ய ஆரம்பித்திருப்பது அந்த மாவட்டத்துக்கு கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்பில் மகேஸை காட்டம் அடையவைத்துள்ளது. ஏற்கெனவே, திருச்சி மேயராக தன் ஆதரவாளரை கொண்டுவந்த நேரு, தற்போது திருவையாறு எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனை அமைச்சராக்க காய்நகர்த்துகிறார்.
இதையடுத்து தன் ஆதரவாளரான தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகத்தை அமைச்சராக்க அன்பில் காய்நகர்த்துகிறார். இதுகுறித்து பேசும் உடன்பிறப்புகள், “அடுத்த சில மாதங்களில் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போகிறது. ஏற்கெனவே மேயர் கோட்டாவில் நேரு வெற்றிபெற்றுவிட்ட நிலையில், இந்தமுறை அமைச்சர் கோட்டா யாருக்குக் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்” என்கிறார்கள்!
சமீபத்தில் நடிகை நயன்தாரா சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றபோது சென்னை மேயர் ப்ரியாவும் அங்கு சென்று அறிமுகப்படுத்திக்கொண்டார் என்பது தெரிந்த விஷயம். இதில் தெரியாத விஷயம் ஒன்றும் இருக்கிறதாம்… இதற்கான இன்ஸ்ட்ரெக்ஷன் சென்றதே அன்பான ஒரு அமைப்பிலிருந்துதான் என்று கிசுகிசுக்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.
ஆனாலும், எதற்காக இந்த சந்திப்பு… அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லையே… என்று மண்டையைக் குடைந்துக்கொண்டிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகிகள்!
சிறு குறு தொடர்புடைய அதிகாரிகள் வட்டாரத்தில் புதுமுக மூன்றெழுத்து நபரைப் பற்றிய பேச்சுத்தான் ஹாட் டாபிக்காக இருக்கிறது. இது குறித்து பேசுபவர்கள், “ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் இந்த நபர் அதிகாரிகளுக்கு அறிமுகமானார். ‘இந்தாங்க அப்பா பேசுறாரு’ன்னு போனை போட்டு அதிகாரிகள்கிட்ட கொடுக்குறாரு. எதிர்முனையில அமைச்சரே, ‘அந்த தம்பிக்கு வேண்டியதை செஞ்சுக் கொடுத்துடுங்கப்பா’னு சொல்லிட்டு போனை வெச்சிடறாரு. பிரமோஷன், டிரான்ஸ்ஃபர் எல்லாத்துலயும் இப்ப அந்த தம்பிதான் கோலோச்சுறாரு” என்கிறார்கள்.