உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
போர் நடவடிக்கையை கைவிட்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, 13 நாடுகள் ஆதரவு அளித்திருந்த நிலையில், இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளது.
இந்தியா தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த நீதிபதி தல்வீர் பண்டாரி, தீர்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தார். ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் தீர்ப்பிற்கு எதிராக வாக்களித்தனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான விவகாரத்தில் இதுவரை இந்தியா ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து அமைப்பிலும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
இந்த நிலையில் முதல்முறையாக ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா நீதிபதி தல்வீர் வாக்களித்திருப்பது இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டுள்ளது.
இருப்பினும், சர்வதேச நீமன்றத்தின் தீர்ப்பு போரை நிறுத்த வழிவகுக்கும் என்பதால், இந்தியா தரப்பில் ஆதரவு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.