சென்னை: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரிய தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்றார்.
ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளது. கடன் மதிப்பை அவர் குறைத்து காட்டியுள்ளார். எனவே ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.