சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்க படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெட்ரோ ரயில்கள் இயக்கும் நேரமும், ரயில்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மெட்ரோ ரயில்களை இயக்கும் நேரம் நீட்டிக்க படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5.30 முதல் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் இனிமேல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரநாட்களில் பீக் ஹவர் எனப்படும் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 10 நிமிடங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.