பாஜகவுக்கு ரூ.41,844..காங்கிரசுக்கு ரூ.53,776!: தேர்தல் பிரச்சார விளம்பரம் செய்ததில் கட்டண பாகுபாடு காட்டிய ஃபேஸ்புக்..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளை விட பாரதிய ஜனதா கட்சியிடம் ஃபேஸ்புக் நிறுவனம் மிக குறைந்த கட்டணம் வசூல் செய்தது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தி ரிப்போர்ட்டர் கலெக்டிவ் மற்றும் அட் வாட்ஸ் இணைந்து சமூக வலைதளத்தில் நடத்தப்பட்ட தேர்தல் விளம்பரம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து திட்ட அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில், 2019 பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலத்தில் அதாவது 22 மாதங்களில் நடந்த 10 தேர்தல்களில் கட்சி விளம்பரம், சமூக வலைதளம் மூலம் மக்களை சென்றடைவது பற்றி புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. இதில் 2019 பொதுத்தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மற்றும் ஆந்திர மாநில தேர்தலில் ஒரு விளம்பரத்தை 10 லட்சம் பார்வைகளுக்கு கொண்டு சேர்க்க பாஜகவிடம் ரூ.61,584 வசூல் செய்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ரூ.66,250 வசூல் செய்துள்ளது. 2020ல் டெல்லி தேர்தலில் ஒரு விளம்பரத்துக்கு ஆம் ஆத்மி கட்சியிடம் மிக அதிகமாக ரூ.64,174 வசூல் செய்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவிடம் ரூ.35,596 வசூல் செய்துள்ளது. பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா கட்சியிடம் ஒரு விளம்பரத்துக்கு ரூ.66,704 வசூல் செய்த ஃபேஸ்புக் நிறுவனம், பாஜகவிடம் ரூ.37,285 வசூலித்துள்ளது. 10 தேர்தல்களில் சராசரியாக 10 லட்சம் பார்வையை அடையும் ஒரு விளம்பரத்துக்கு பாஜக ரூ.41,841 செலுத்தியுள்ளது. அதேநேரத்தில் ரூ.53,776 காங்கிரஸ் கட்சி செலுத்தியுள்ளது. இதன்மூலம் பாஜக மற்றும் எதிர்கட்சிகளிடம் ஃபேஸ்புக் நிறுவனம் வசூல் செய்த தொகையில் பாரபட்சம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் கட்சியும், வேட்பாளர்களும் செலவு செய்து, செலவு கணக்கில் காட்டப்படுகிறதா? என்ற கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.