பெங்களூரு:
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதை தொடர்ந்து உயர்நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’ என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.
உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலில் முஸ்லிம் அமைப்பினர் கடை அடைப்பு நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, “ஹிஜாப் அத்தியாவசியமான நடைமுறை அல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை ஏற்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரியும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. குறிப்பாக உடுப்பி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மாவட்ட பகுதியில் போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இஸ்லாமிய மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இந்த பந்த்துக்கு எஸ்டிபிஐ, சிஎப்ஐ உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பெங்களூர், தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர், தார்வார் மாவட்டம் உப்பள்ளி, உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் உள்பட மாநிலத்தின் சில இடங்களில் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு ஊர்வலம், போராட்டம் நடத்த அனுமதியில்லை. இதனால் மாநிலத்தின் பிற இடங்களில் மக்கள் ஒன்றாக கூடி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக ரிசர்வ் படை போலீசார், மாவட்ட ஆயுத படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வகுப்பறையில் ஹிஜாப் அணிய கூடாது என்று நீதிமன்ற உத்தரவால் பல மாணவிகள் படிப்பை கைவிட முடிவு செய்துள்ளனர். 5 அல்லது 6 இறுதியாண்டு மாணவிகள் டிரான்ஸ்பர் சர்டிபிகேட் கேட்டுள்ளனர். பல மாணவிகள் வீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.