கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணைக்கு தினமும் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பான அலுவல் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இவர்கள் தேக்கடியிலிருந்து படகு மூலமாகவோ, வள்ளக்கடவிலிருந்து வனப்பகுதி வழியாக வாகனத்திலோ சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணைக்குச் செல்பவர்களின் விவரங்கள் பொதுப்பணித் துறையின் வருகைப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். மேலும் அந்தப் பதிவேட்டில் யார், எதற்காக அணைக்கு வருகிறார்கள் என்பதை குறிப்பிட்டு உறுதிபடுத்த வேண்டும்.
இந்நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதியன்று தமிழக அரசுக்குச் சொந்தமான படகில் எந்தவித அனுமதியும் இன்றி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து கேரளாவைச் சேர்ந்த 4 பேர் அணைக்கு சென்று வந்துள்ளனர். தமிழகத்திற்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக செய்தியாளர்களைக் கூட அனுமதிக்கவிடாமல் கேரள அரசு தடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி கேரளாவைச் சேர்ந்த 4 பேர் சென்று வந்த இச்சம்பவம் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து அணைக்கு சென்று வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்த முல்லைப் பெரியாறு அணை காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர் நந்தனம் பிள்ளை உத்தரவிட்டார். அதில் கேரள காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் டெல்லி காவல் துறையில் தற்போது பணியாற்றும் ஜோன் அவரது மகன் வர்கீஸ் என 4 பேர் முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக படகில் சென்று வந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. படகை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரியான பைலட் முரளி என்பவர் இயக்கியுள்ளார். மேலும் பெரியாறு அணையில் உள்ள வருகைப்பதிவேட்டில் இவர்கள் சென்றது குறித்து எந்தத் தகவலும் பதிவு செய்யப்படவில்லை.
பாதுகாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையில் அத்துமீறி, அனுமதியின்றி சென்று வந்த ஓய்வுபெற்ற கேரள போலீஸ் அதிகாரிகள், டெல்லி போலீஸ் அதிகாரி, அவரது மகன் என 4 பேர் மீதும் முல்லைப் பெரியாறு அணை கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் தமிழகத்திற்கு சொந்தமான படகில், தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளின் எந்தவித அனுமதியும் இன்றி கேரளாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளை அழைத்துச் சென்று வந்த படகின் பைலட், உடன் சென்ற தமிழக அதிகாரிகள் மீது இதுவரை தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.