உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து கோவா, மணிப்பூர் மாநில முதல்வர்களும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரவர் மாநிலங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை மீண்டும் யோகி ஆதித்யநாத்தே முதல்வராக பொறுப்பேற்பார் என ஏறக்குறைய முடிவாகிவிட்டது. அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்களை முடிவு செய்யும் பணிகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மீதும் பாரதிய ஜனதா தலைமை நம்பிக்கை வைத்திருப்பதால், மீண்டும் அவர்களே முதல்வர் பதவியில் அமரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாரதிய ஜனதா சார்பில் இம்மாநிலங்களில் வரும் வாரம் சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்களின் கூட்டம் நடத்தப்பட்டு, முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்றும், அதன் பிறகே பதவியேற்பு விழா நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் எதிர்காலம் தான் கேள்விகுறியாக இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும், அம்மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது. இதற்கு புஷ்கர் சிங் தாமியின் பங்கும் கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உத்தராகண்ட் மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் புஷ் சிங் தாமியும் இடம் பெற்றிருப்பதாகவே தெரிகிறது.
வெற்றி பெற்ற நான்கு மாநிலங்களிலும் அமைச்சர்களை தேர்வு செய்வதில் விரிவான முன்னெடுப்புகளை பாரதிய ஜனதா மேற்கொண்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில். அமைச்சர்களை நியமிப்பதில் பாரதிய ஜனதா தலைமை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. வயது, கல்வியறிவு, பாலினம், சாதி, மதம் என பல்வேறு விதங்களில் ஆய்வு செய்து, ஒவ்வொரு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய பார்வையாளராக அமித் ஷாவையும், உத்தராகண்ட் மாநிலத்திற்கு ராஜ்நாத் சிங்கையும் பாரதிய ஜனதா தலைமை நியமித்துள்ளது. அதே போல் மணிப்பூருக்கு நிர்மலா சீதாராமன், கோவாவுக்கு நரேந்திர சிங் தோமர் நியமிக்கப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM