சென்னை மழைநீர் வடிகால் பணிகள்- மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை:

சென்னையில் கடந்த வடகிழக்கு பருவமழையின்போது அக்டோபர் 25-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்தது.

இதில் நவம்பர் மாதம் 7-ந்தேதி 6 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அந்த மாதத்தில் மட்டும் 105 சென்டி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத தொடர் மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

தி.நகர், வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், புரசைவாக்கம், திருவொற்றியூர், மணலி, வடபழனி, அரும்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வடிய ஒரு வாரம் ஆனது.

இதில் தி.நகர், மாம்பலம் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருந்தும் நீர் வடியாமல் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் அகற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்தவும், கால்வாய் இணைப்பு பகுதி இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்தி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி முதல் கட்டமாக திரு.வி.க. நகர் மண்டலம் புளியந்தோப்பு பகுதியில் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப புதிய மழைநீர் வடிகால் ரூ. 7 கோடியில் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் சிறு தெருக்களிலும் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வந்தது.

வழக்கமாக 6 முதல் 7 சென்டி மீட்டர் மழைநீர் வடிவதற்கு ஏற்ப கட்டப்படும் வடிகால் கட்டமைப்பு 10 சென்டி மீட்டர் மழை நீரை உள்வாங்கும் அளவுக்கு வடிகால் கட்டமைப்பு பெரிதாக அமைக்கப்பட்டு வந்தது.

இதே போல் வேப்பேரி பிரதான சாலையிலும் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்பாக பெரிய அளவில் மழைநீர் வடிகால் வசதி கட்டப்பட்டு வந்தது.

இந்த புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

முதலில் வேப்பேரி பிரதான சாலைக்கு சென்ற அவர் காரை விட்டு இறங்கி அங்கு நடந்து சென்று மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாநகராட்சி  ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அங்கு நடைபெற்று வரும் பணிகளை விளக்கி கூறினார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
கேட்டுக்கொண்டார்.

இதன்பிறகு புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் பெரம்பூர் நெடுஞ்சாலையில் கூக்ஸ் சாலை சந்திப்புக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பின்னர் அங்கிருந்து மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ராமாராவ் தெருவுக்கு சென்றார். அங்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மந்தைவெளி பஸ் நிலையம் அருகே தேவநாதன் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.

இது தவிர சென்னையில் மற்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.

அப்போது, “அடுத்த மழை காலம் வருவதற்குள் சென்னை நகரில் மழைநீர் வடிகால் கால்வாய்களை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்”என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து சென்று ஆய்வு செய்ததை பார்த்த பொதுமக்கள் அவரை பார்த்து வணங்கினார்கள். அப்போது பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளையும் கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.