நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று முதல்முறையாக பஞ்சாப்பில் ஆட்சியமைத்திருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராகப் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவருமான பக்வந்த் மான் முன்னிறுத்தப்பட்டார். இவர் தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் நகைச்சுவை நடிகராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆம் ஆத்மி பஞ்சாப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, வழக்கமாகப் பின்பற்றப்படும் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு மாறாக, பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பஞ்சாப்பின் 17-வது முதல்வராக பக்வந்த் மான் பதவியேற்றுக்கொண்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கலந்துகொண்ட இந்த விழாவில், ஆம் ஆத்மியின் ஆதரவாளர்களில் ஆண்கள் மஞ்சள் நிற டர்பனுடனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவுடனும் கலந்துகொள்ள கட்கர் கலனே மஞ்சள் மயமாக ஜொலித்தது. பக்வந்த் மான் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட இந்த நிகழ்ச்சி, அவருக்கு மற்றுமொரு காரணத்தால் நெகிழ்ச்சியான நிகழ்வாக மாறியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பக்வந்த் மன் நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் மகள், மகனுடன் இணைந்தார். இதுகுறித்து பக்வந்த் மானின் நெருங்கிய நண்பர் ஒருவர், “பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் பெருமிதமான தருணங்களில் ஒன்றாக, தன் மகன், மகளுடன் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு பக்வந்த் மன் இணைந்திருப்பது உணர்ச்சிகரமான ஒன்று” என தனியார் ஊடகத்திடம் கூறியுள்ளார்.
பக்வந்த் மானின் முதல்வர் பதவியேற்பு விழாவில், அவரின் முன்னாள் மனைவி இந்தர்பிரீத் கவுர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் இருவரும் கடந்த 2015-ல் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும், பக்வந்த் மானின் மகன், மகளான தில்ஷன் மான், சீரத் கவுர் மான் ஆகியோர் தங்கள் தந்தை முதல்வராகப் பதவியேற்பதை காண்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து நேரில் வந்திறங்கினர். இந்த நிகழ்ச்சியில் தங்கள் தந்தையுடன் சேர்ந்து தில்ஷன் மான், சீரத் கவுர் மான் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக தன் முன்னாள் கணவருடன், தன் பிள்ளைகள் இணைந்திருப்பது பற்றி இந்தர்பிரீத் கவுர், தனியார் ஊடகத்திற்கு அமெரிக்காவிலிருந்தே சிறப்பு பேட்டியளித்துள்ளார். இந்தர்பிரீத் கவுர் அந்த பேட்டியில், “இரண்டு குழந்தைகளும் மிகவும் உற்சாகமாக இருந்தனர். இந்த உணர்வை மூழ்கடிக்க அவர்களுக்கு இன்னும் சிறிது நேரம் தேவை. நான் எப்போதும் அவரின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தேன். ஆனால் அது திரைக்குப் பின்னால், உடல் ரீதியான தூரம் இருந்தது. அதனால் அவருடைய வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்யவில்லை என்று அர்த்தமல்ல. என் பிரார்த்தனையில் அவர் எப்போதும் இருந்தார், இனியும் தொடர்ந்து இருப்பார்” என நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.
பக்வந்த் மான் தன் மனைவியுடன் விவாகரத்து பெற்ற பிறகு ஒருமுறை, “நீண்ட காலமாக நிலுவையிலிருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. எனது இரண்டு குடும்பங்களில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. நான் பஞ்சாப்பை தேர்ந்தெடுத்துள்ளேன்” என தனது விவாகரத்து குறித்து விவரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(News And Photo Source:- The Indian Express)