”என் மகள் நீண்ட வருட இடைவெளிக்கு பின், அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு டைரக்ஷனில் இறங்கியிருக்கிறார். அவரது ‘பயணி’ என்ற மியூசிக் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்..” என ட்விட்டரில் பூரித்திருக்கிறார் ரஜினி.
தெலுங்கின் டாப் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், ஷ்ரிஸ்டி வர்மா நடிப்பில் ‘பயணி’ என்ற மியூசிக் சிங்கிளை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதற்கு முன்னர் ‘3’, ‘வை ராஜா வை’ய ஆகிய படங்களையும் ‘சினிமா வீரன்’ என்ற டாக்குமென்ட்ரியையும் இயக்கியிருந்தார்.
இப்போது இயக்கியுள்ள ஆல்பம், பிற மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘சஞ்சாரி’ என்ற பெயரில் அல்லு அர்ஜூனும், மலையாளத்தில் யாத்ரகாரன்’ என்ற பெயரில் மோகன்லாலும் ட்விட்டரில் இதனை வெளியிட்டுள்ளனர்.
‘காற்றுக்கு மேலே காகிதம் போலே..’ எனத் தொடங்கும் இந்த பாடலை விவேகா எழுத, அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் காதலனாக நடித்திருக்கும் ஜானி மாஸ்டர், தெலுங்கில் பல படங்களுக்கு நடனம் அமைத்தவர். தமிழிலும் ‘டாக்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா…’ தனுஷின் ‘மாரி 2’, ‘மாறன்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களிலும் நடனம் அமைத்தவர். இப்போது விஜய்யின் ‘பீஸ்ட்’டில் இருக்கிறார்.
‘பயணி’ க்கான பாடலை எழுதியிருக்கும் விவேகாவிடம் பேசினேன்.
”ஐஸ்வர்யா மேம்தான் பாடல் எழுத சொன்னாங்க. லவ் ஆல்பம் ஸாங் இது. ‘வாழ்க்கை போற போக்குல பயணிக்கிறவனின் காதல்.. அதே சமயம் காதல்ங்கறது எல்லா இடத்திலும் இருக்குனு சொல்ற மாதிரியும் இருக்கும்.. தூணிலும் காதல் துரும்பிலும் காதல்ங்கிறது போலதான் எல்லா திசைகளிலும் காதல் கிடைக்கும்னு சிச்சுவேஷனை அவங்க சொலிட்டு ‘நீங்க விரும்பற மாதிரி எழுதுங்க’னு முழு சுதந்திரமும் கொடுத்தாங்க. உடனே எழுதிக்குடுத்துட்டேன். இந்த ஆல்பம் இப்ப வெளியாகியிருக்கறது சந்தோஷமா இருக்கு. வீடியோ வெளியானது நீங்க சொல்லித்தான் தெரியும்..” என்கிறார் விவேகா.
இந்த பாடலுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.