டெல்லி: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடியை கடனுதவியாக ஒன்றிய அரசு வழங்குகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு அவசர கடனுதவியாக ரூ.3,750 கோடியை இந்தியா வழங்கியது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்குவதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உக்ரைன் போர் சூழல் அச்சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இலங்கையிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு குறைந்துவிட்ட நிலையில் உணவு, எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க இயலாத நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவின் உதவியை நாடி அந்நாட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இலங்கை நிதியமைச்சர், கூடுதலாக ரூ.7,500 கோடி கடனுதவியை பசில் ராஜபக்ச கேட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடியை கடனுதவி வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியா அளிக்க உள்ள கடன் தொகையை கொண்டு உணவு, எரிபொருள், மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.