ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், 12 குழந்தைகளுக்கு தாயான ஓல்கா செமிடியானோவா என்பவர் ரஷ்யப் படைகளை எதிர்த்துக் களமாடி உயிரிழந்த சம்பவம் உக்ரைன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரை அனைவரும் `நாயகி’ எனப் புகழ்ந்து வருகின்றனர்.
48 வயதான போர் மருத்துவர் ஓல்கா செமிடியானோவா, ஆறு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். இவர் மேலும் ஆறு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் `தாய் நாயகி’ என்ற பட்டம் ஓல்கா செமிடியானோவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. போர் தொடங்கிய போதே யுத்தகளத்தில் வீரத்துடன் உக்ரேனிய படையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், மார்ச் மாதம் 3-ம் தேதி உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நடந்த கோரத் தாக்குதலின்போது, கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் அந்த தாக்குதலில் வயிற்றில் அடிப்பட்டு ஓல்கா செமிடியானோவா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. கடும் போர் இன்னும் நடந்து வருவதால் அவரின் உடல் மீட்கப்படாமல் இருக்கிறது.
இது தொடர்பாக அவர் மகள் ஜூலியா கூறும் போது, “என் தாய் கடைசி வரை வீரர்களைக் காப்பாற்றினார். அவர் இறந்த இடத்திலிருந்த புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் கடுமையான போரின் காரணமாக இன்னும் என் தாயை அடக்கம் செய்ய முடியவில்லை” என்று கூறினார்.
உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்சென்கோ செய்தியாளர்களிடம், “ரஷ்ய ராணுவ வீரர்களுடனான மோதலில், தனது படைப்பிரிவு தப்பிக்க முடியாது என்று உறுதியான பின்பும், இறுதி வரை நாட்டைப் பாதுகாக்கும் விருப்பத்தில் அவர் உயிரிழந்தார். அவர் ஒரு தேசிய வீராங்கனை. எனக்கு ஒரு ஹீரோ” என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பலரும் செமிடியானோவாவை `நாயகி’ என குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.