ஜெனீவா: கடந்த ஒரு வாரத்தில் ஒரு கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே உலக நாடுகள் கவனமாக இருக்க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகமெங்கிலும் முன்னதாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது சீனாவின் ஜிலான் மாகாணத்தில் வைரஸ் தாக்கம் திடீரென அதிகரிக்க துவங்கியதை அடுத்து ஒரு கோடி மக்கள் வசிக்கும் இப்பகுதியை மூட சீன கம்யூனிச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகளின் ஆய்வின்படி வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் நான்காவது அலை பரவும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மார்ச் மாதத்தில் வைரஸ் பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுமா என்கிற கேள்வி பலர் பலரால் எழுப்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தினால் அது நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் தற்போது பெரும்பான்மையான இந்தியர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டுள்ள நிலையில் சமூக விலகல்களை பின்பற்றி செயல்பட மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேஸஸ் ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மார்ச் மாத துவக்கம் முதலே வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி விட்டதாகவும் தற்போது உலகம் வைரஸ் தாக்கத்தால் கத்தியின் கூர்முனையில் நின்று கொண்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளார். உலக நாட்டு அரசுகள் நான்காவது அலையை மிக கவனமாக கையாள வேண்டும் என்று அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement