மதுரை: ”எனக்கு கெடு விதிக்க அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன பிரம்மாவா?” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியது: ”தமிழக மின்சார வாரியத்தின் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி பிஜிஆர் நிறுவனத்தின் ஊழியர் போல் பேசுகிறார். எனக்கு கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா?.
நாமக்கல் இருளப்பாளையத்தில் ஒரு நிறுவனம் மின்வாரியத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் மின்வாரிய அமலாக்கத்துறை நடத்திய சோதனையை அமைச்சர் செந்தில்பாலாஜி தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த தொழிற்சாலையை நடத்தி வருபவர் அமைச்சரின் உறவினர். அவர் கரூரைச் சேர்ந்தவர்.
இவ்வாறு செய்வதால் தான் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்சாரம் வாங்குவது, மின்வாரிய டெண்டர் வழங்குவதில் சிலருக்கு சாதகமாக செயல்படுவது, முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களில் சோதனை நடத்தவிடாமல் தடுப்பது, அதற்காக மாதம் மாதம் பணம் வாங்கிக் கொள்வது என பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
என் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் சரி, போலீஸாரை விட்டு கைது செய்து சிறையில் அடைத்தாலும் சரி. என்ன தோணுகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஊழல் செய்ய ஆரம்பிக்கும் போது அதை தட்டிக்கேட்டால் சிறைக்கு அனுப்புவோம் என்றால் தயவு செய்து அனுப்புங்கள். சந்தோஷமாக சிறைக்கு சென்று, திரும்பி வந்ததும் திமுக அரசின் ஒவ்வொரு ஊழல்களையும் வெளிப்படுத்துவேன். திமுக மட்டும் ஆட்சியில் இல்லை. பாஜகவும் ஆட்சியில் உள்ளது என்பதையும் திமுகவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக பண அரசியல் செய்கிறது. அதற்காக சில அமைச்சர்களைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறோம். பிஜிஆர் ஒப்பந்த முறைகேடு குறித்து தமிழக முதல்வருக்கும், செபிக்கும் கடிதம் அனுப்புவோம். பிஜிஆர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் திமுக அரசை வெளிப்படையான அரசு என ஒத்துக்கொள்கிறோம்.
அதிமுக அரசு பிஜிஆர் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். அதிமுக அதை செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை செய்திருக்கலாம். அவர்களும் செய்யவில்லை. இதனால் அந்த நிறுவனம் முறைகேடாக ஒப்பந்தம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 20 சதவீதம் கப்பம் கட்டிய பிறகே தொழில் தொடங்கும் நிலை உள்ளது. நிலம் வகை மாற்றத்துக்கு பெரியளவில் லஞ்சம் கொடுக்க வேண்டியதுள்ளது. இதை இப்போது நிறுத்தாவிட்டால் எப்போதும் நிறுத்த முடியாது. ஊழலை பொறுத்தவரை பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டியது கடமை. அதை செய்வோம்” என்றார் அண்ணாமலை.