சாட்சிகளை கலைத்தார் : திலீப் வழக்கறிஞர் மீது கடத்தப்பட்ட நடிகை புகார்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளைக்கு எதிராக கடத்தப்பட்ட நடிகை எர்ணாகுளம் பார் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கிறஞர் ராமன் பிள்ளை நான் கடத்தப்பட்ட வழக்கில் பல சாட்சிகளை கலைத்துள்ளார். விசாரணையின் தொடக்க கட்டத்தில் எனக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பல்டி அடித்ததற்கு ராமன் பிள்ளையின் தலையீடுதான் காரணமாகும். அவரும், அவரது உதவியாளர்களும் பல சாட்சிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கினர். பணம் வாங்காதவர்களை மிரட்டியும் உள்ளனர்.
சாட்சிகளை எதிர்தரப்பு வழக்கறிஞர் எந்த காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாது. ஆனால், அதை மீறி ராமன் பிள்ளை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், திலீப்பின் செல்போனில் இருந்த விவரங்களை அழிப்பதற்கும் அவரது துணை வழக்கறிஞர்கள் உதவி செய்துள்ளனர். இவை வழக்கறிஞர் தொழில் சட்டத்துக்கும், நேர்மைக்கும் எதிரானதாகும். எனவே, திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளை மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.