“சோனியா காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்த கபில் சிபலை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சருமான டி.எஸ். சிங் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டதால், காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்த தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளும் எதிர்க்கப்படவில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
காங்கிரஸ் செயற்குழுவில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படாததற்கு ஜி 23 தலைவர்கள் (காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள்) கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், அதில் இடம்பெற்றுள்ள கபில் சிபல் ஒருபடி மேலே சென்று, “தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பதவி விலக வேண்டும். கட்சி தலைமை பதவியை நேரு குடும்பத்தை சேராத மற்ற தலைவர் ஒருவர் வகிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார். இது, காங்கிரஸுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கபில் சிபலுக்கு சத்தீஸ்கர் மாநில அமைச்சர் டி.எஸ். சிங் தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், “காங்கிரஸ் தலைமை குறித்தும், கட்சி செயற்குழுக் கூட்டத்துக்கு எதிராகவும் பொதுவெளியில் கருத்து கூறியதற்காக கபில் சிபலை காங்கிரஸில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவருடைய கருத்து மிகவும் கீழ்த்தரமானது” எனக் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM