முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்டி படிக்கலாம் 4 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம்: யுஜிசி புதிய திட்டம்

புதுடெல்லி: முதுகலை பட்டம் பெறாமல் நேரடியாக ‘பிஎச்டி’ படிக்கும் வகையில், 4 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்பை பல்கலைக் கழக மானியக் குழு அறிமுகம் செய்ய உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ள ஒன்றிய அரசு, அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. தற்போது, இளநிலை, எம்ஏ, எம்எஸ்சி போன்ற முதுகலை பட்டப்படிப்புகளை முடித்த பிறகே, பிஎச்டி எனப்படும் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும். இதை தவிர்க்கும் வகையில்,   4 ஆண்டு இளநிலை படிப்புகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதை முடித்தால், முதுகலை படிக்காமல்  நேரடியாக பிஎச்டி படிப்பில் சேரலாம்.அதே நேரம், ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டு கால இளநிலை படிப்பும் தொடரும். விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த 4 ஆண்டு கால முதுகலை படிப்பும் அறிமுகப்படுத்தப்பட  உள்ளது. இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவோ அல்லது  ஆன்லைன் மூலமாகவோ,  தொலைதூரக் கல்வி மூலமாகவோ படிக்க முடியும்.இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி)  தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், ‘இளங்கலைக் கல்வியில் தற்போதுள்ள கட்டமைப்பில் பல பிரச்னைகள் உள்ளன. இன்றைய கல்வி முறையில் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை விட பல திறன்களைக் கொண்ட மனித வளங்களை நிறுவனங்கள் தேடுகின்றன. எனவே, மாணவர்களின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொதுக் கல்வியின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்,’’ என்றார்.புதிய 4 ஆண்டு இளநிலை படிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* இந்த 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள்,  விரும்பிய நேரத்தில் பாதியில் வெளியேறி மீண்டும் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.* இந்த படிப்புக்காக சில பாடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. * 3  செமஸ்டர் முறையில் தேர்வுகள் நடத்தப்படும். * 4 ஆண்டு பாடத்திட்டத்தில் 160 கிரெடிட்கள் வழங்கப்படும். 15 மணிநேர வகுப்பறை கற்பித்தலுக்கு ஒரு கிரெடிட்  கணக்கிடப்படும்.* 7வது செமஸ்டரின் தொடக்கத்தில், மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை (பிஎச்டி) மேற்கொள்ள முடியும். * 8வது மற்றும் இறுதி செமஸ்டரில் அவர்கள் ‘மேஜர்’ என்று அறிவிக்கப்படுவார்கள்.* பிஎச்டி. படிப்புக்கான  மொத்த இடங்களில் 60 சதவீதத்தை நெட்/ஜேஆர்எப் தேர்ச்சி பெற்ற மாணவர்களாலும், மீதமுள்ளவை பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவும் நிரப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.