பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பழனியில் முத்துகுமாரசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்த முருக பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன், கழுகாசலமூர்த்தி எழுந்தருளிய வைரத் தேரை, அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலங்கரிக்கபட்ட தேரில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை முருகன் சுவாமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அரோகரா, அரோகாரா முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகுகுத்திக்கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு செக்கு ஆட்டியும், கரும்பு இயந்திரத்தில் சாறு பிழிந்தும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிப்பட்டு சென்றனர்.