புனித் ராஜ்குமாரின் கடைசி படம் 'ஜேம்ஸ்' இன்று வெளியீடு
கன்னடத் திரையுலகத்தில் இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தன்னுடைய 46வது வயதில் காலமானார். அவரது மறைவு கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது மற்ற திரையுலகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் நடித்து முடித்த கடைசி படம் 'ஜேம்ஸ்'. அவரது இறப்புக்குப் பின் அவரது அண்ணன் சிவராஜ்குமார் தனது தம்பிக்காக படத்தில் டப்பிங் பேசியுள்ளார். சேத்தன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று புனித் ராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். கர்நாடகாவில் மட்டும் 400 தியேட்டர்களுக்கு மேல் இப்படம் வெளியாகி உள்ளது.
புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் இன்று கர்நாடகா முழுவதும் படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் தங்களது அபிமான நடிகரின் பட வெளியீட்டை உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள். வேறு எந்த கன்னடப் படமும் இன்று கர்நாடகாவில் வெளியாகவில்லை. புனித்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத்தான் 'ஆர்ஆர்ஆர்' படத்தைக் கூட ஒரு வாரம் கழித்து அடுத்து வாரம் வெளியிடுகிறார்கள்.
கன்னட சினிமா பிரபலங்கள், மற்ற மொழி சினிமா பிரபலங்கள் இன்று 'ஜேம்ஸ்' பட வெளியீட்டிற்காகவும், புனித் ராஜ்குமார் பிறந்தநாளுக்காகவும் உணர்ச்சிபூர்வமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.