இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பட்டிப்பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அஹமட் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்ற சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.
எல்ல புகையிரத நிலையத்திற்கு உடரட மெனிகே ரயிலில் பயணித்த அவர், நேற்று (16) பட்டிப்பொல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த எகிப்திய பிரஜை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.