கீவ்: உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி (36) கடந்த2013-ல் விம்பிள்டன் தொடரின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரைவீழ்த்தி அனைவரது பார்வையையும் தனது பக்கம் ஈர்த்தார். டென்னிஸ் தரவரிசையில் 116-வது இடத்தில் உள்ள செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி தற்போது டென்னிஸ் மட்டையை விடுத்து தனது நாட்டுக்காக ரஷ்யாவுக்கு எதிரான போர்க்களத்தில் இறங்கியுள்ளார்.
டென்னிஸ் உடையில் வலம் வந்த ஸ்டாகோவ்ஸ்கி, கீவ் நகரின்கலாஷ்னிகோவ்வில் உள்ளஜனநாயகத்திற்கான போராட்டத்தின் சின்னமான மைதான் சதுக்கத்தில் ராணுவ உடை அணிந்து துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு தொழில்முறை டென்னிஸில் இருந்து விலகியிருந்த ஸ்டாகோவ்ஸ்கி பிப்ரவரி 24-ம் தேதிஉக்ரைன் மீது போர் தொடுக்கப்படுவதற்கு முந்தைய தினம் தனதுமனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் விடுமுறைக்காக துபாய் சென்றிருந்தார்.
மறுநாள் ரஷ்ய குண்டுகள் தனது நாட்டின் மீது விழும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துஅதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதையடுத்து, உக்ரைன் திரும்பிய அவர் ராணுவத்தில் தன்னார்வலராக இணைந்துள்ளார். ஸ்டோகோவ்ஸ்கி ஒரு நாளைக்கு இரு முறை என 4 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ரோந்து பணியானது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி கூறும்போது, “துப்பாக்கியுடன் இருப்பதை வசதியாக உணர்கிறேன் என்று சொல்ல முடியாது. யாரையாவது சுட வேண்டுமென்றால் நான் எப்படி நடந்துகொள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த விஷயங்களில் நான் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று விரும்புகிறேன்.
துபாயில் இருந்தபோது எனதுமனைவியிடம், நான் உக்ரைன் திரும்பிச் செல்வதாக தெரிவித்தேன். அப்போது அவள், மிகவும் வருத்தப்பட்டாள். ஆனால் இப்போது அவள் புரிந்து கொண்டாள்” என்றார்.