ஹேக்: உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரஷ்யா நிராகரித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்த உக்ரைனுக்கு, அம்முடிவு தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. குண்டுகள், ஏவுகணைகளை வீசி உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் இறந்துள்ளனர். சுமார் 30 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போரை நிறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தனதுதாக்குதலை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடும்படி நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் சார்பில் முறையிடப்பட்டது. குடிமக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் உயிரைக் காத்துக் கொள்ள மக்கள் அகதிகளாக தப்பிச் செல்வதாகவும் விசாரணையின்போது உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தங்களது நாட்டின் தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ரஷ்யா தெரிவித்தது.
விசாரணை முடிந்த நிலையில், உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் தனது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நிலைமையை மோசமாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா..
தீர்ப்பை உறுதி செய்யும் ஜூரிகள் எனப்படும் 15 நீதிபதிகளில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி உட்பட 13 பேர் ரஷ்யாவுக்கு எதிராக போரை நிறுத்த வேண்டும் என்று வாக்களித்தனர். ரஷ்யா, சீனா தரப்பிலான நீதிபதிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு முன்பு ஐ.நா. சபையில்ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு போரை நிறுத்த வழிவகுக்கும் என்பதால்இந்தியா தரப்பில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியாது என ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி போஸ்கோவ் தெரிவித்துள்ளார்.