2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் முடிந்தபின், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
வேளாண் பட்ஜெட்டை அந்தத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில்தான் வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் எனவும், இந்த விவாதம் 3 நாள்கள் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.