புதுச்சேரியில் வீடுகள், காலிமனைகள், சொத்துகள், வணிக உரிமம், குடிநீர் போன்றவற்றுக்கு வரிகளை வசூலித்துவரும் புதுச்சேரி நகராட்சி, தற்போது வருவாயைப் பெருக்க புதிய புதிய வரி விதிப்புகளிலும் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், புதுச்சேரியின் நகர்ப்புறச் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும் நகராட்சி, அதற்காக டெண்டர் கோரியிருக்கிறது. அதனடிப்படையில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு வீதிக்கும் டெண்டர் ஆரம்பத் தொகையை நிர்ணயித்து, அதற்குச் செலுத்தவேண்டிய முன்வைப்பு தொகையும் நகாராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 31.3.3023 வரை ஓராண்டுக்குத் தனியாருக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதற்கான மின்னணு ஏலம் வரும் 25-ந் தேதி நடைபெறவிருக்கிறது. அதேபோல புதிய பேருந்து நிலையத்துக்குள் வர நுழைவுக்கட்டணம், எந்திரம் மூலம் வாகன எடை பார்க்கக் கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவை தவிர முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், சின்னமணிக்கூண்டு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட் உள் கடைகள், வெளிப்புறக் கடைகளில் அடிக்காசு வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
1. புராவிடன்ஸ் மால் எதிரில் உள்ள சிங்கார வேலர் திடல்.
2. புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள்.
3. பழைய சிறை வளாகப் பகுதி.
4. நேரு வீதியில் ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து காவல் நிலையம் வரை.
5. அண்ணா சிலை சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்னல் வரை.
6. ராஜா தியேட்டர் சிக்னல் முதல் அதிதி ஹோட்டல் சிக்னல் வரை.
7. அரவிந்தர் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மணக்குள விநாயகர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள்.
8. பாரதி பூங்கா மற்றும் அரசுப் பொது மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள்.
9. துய்மா வீதி மற்றும் ரோமன் ரோலண்ட் விதிகள்.
10. செயின்ட் லூயி வீதிக்கு கிழக்கிலுள்ள பகுதிகள்.
11. பழைய துறைமுகச் சாலை டூப்ளே முதல் பழைய துறைமுக நுழைவாயில் வரை.
12. தெற்கு புல்வார்ட் சந்திப்பிலுள்ள டூப்லக்ஸ் சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள்.
13. எஸ்.வி.பட்டேல் சாலை அதிதி ஹோட்டல் முதல் பழைய சாராய ஆலை வரை உள்ள பகுதிகள்.
14. தெற்கு மாட வீதியில் அண்ணா சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள்.
15. காசிம் வீதி என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் பெரிய வாய்க்கால் மீது அமைந்துள்ள பகுதிகள்.
16. மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்காவில் வடக்கு மற்றும் நியூட்டன் தியேட்டர் அருகிலுள்ள பகுதிகள்.
17. இந்திரா காந்தி சிலையில் வாசன் கண் மருத்துவமனை வரையிலுள்ள பகுதிகள்.
18. உள்ளாட்சித்துறை எதிரில் அமைந்துள்ள காலி இடத்திலுள்ள பகுதி.
19. நூறடி சாலை பாலம் முதல் ஆர்.டி.ஓ ஆபீஸ் வரை அமைந்துள்ள காலி இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்.
20. புதுவை மெரினா பீச் பகுதியில் அமைந்துள்ள பகுதிகள்.
நகராட்சியின் இந்த நடவடிக்கை புதுச்சேரி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.