வறுத்து அரைக்கணும்… இப்படிச் செய்தா வத்தக் குழம்பு செம்ம டேஸ்ட்; 3 நாள் தாங்கும்!

arachuvitta vatha kuzhambu in tamil: பெரும்பாலான வீடுகளில், மதியத்திற்கு எப்போதும் சாம்பார், காரக்குழம்பு தான். இதற்கு மாற்றாக ஒரு எளிய செய்முறையை நீங்கள் தேடுபவராக இருந்தால், இந்த டேஸ்டியான வத்தக்குழம்பை முயற்சி செய்யலாம்.

நம்மில் பலர் உணவங்களில் வத்தக்குழம்பை விரும்பி சாப்பிடுவோம். சிலர் டேஸ்ட்டான வத்தக்குழம்பு கிடைக்கும் உணவங்களை தேடி சென்று சாப்பிடுவார். ஆனால் அவற்றை நமது வீடுகளில் முயற்சி செய்ய மாட்டோம். ஏனெனில் வத்தக்குழம்பின் செயல்முறை கடினம் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டுள்ளோம்.

ஆனால், நாம் இன்று பார்க்கவுள்ள வத்தக்குழம்பு செய்முறை ரொம்பவே ஈஸியான ஒன்றாகும். இதன் ஸ்பெஷாலிட்டியே, தனியாக மசாலாவை வறுத்து அரைப்பது தான். இப்படி வறுத்து அரைத்த வத்தக்குழம்பு 3 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சரி., இப்போது இந்த டேஸ்டியான வத்தக்குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

வறுத்து அரைத்த வத்தக்குழம்பு தயார் செய்யத் தேவையான பொருட்கள்:

அரைக்க…

கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா விதைகள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2

குழம்பிற்கு…

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 கொத்து
சின்ன வெங்காயம் – 8
தக்காளி – 1
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (ஊற வைத்து, கரைத்து)
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைத்த வத்தக்குழம்பு சிம்பிள் செய்முறை:

முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் அரைக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவை நன்கு ஆறிய பின், அவற்றை மிக்சியில் இட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து தக்காளி, வெங்காயத்தை நறுக்கி மிக்சியில் இட்டு தனித் தனியாக அரைத்துக் கொள்ளவும்.

இதன்பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து சூடேற்றவும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து வெங்காயம் பேஸ்ட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

இவற்றுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு இடைவிடாமல் வதக்கவும்.

பிறகு ஊறவைத்து கரைத்த புளிக் கரைசலை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இவை கொதித்து வரும் போது, சூடான எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

இப்போது அவற்றை கீழே இறக்கினால் டேஸ்டியான வறுத்து அரைத்த வத்தக்குழம்பு தயார். இவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.