புதுச்சேரியில் கைவினைப் பொருள்களின் சந்தையை மேம்படுத்தும் வகையில், அம்மாநில சார்பில் அமைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருள்கள் கண்காட்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத்துறையும், மாவட்ட தொழில் மையமும் இணைந்து கடற்கரை சலையில் உள்ள காந்தி திடலில் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை அமைத்துள்ளது. அங்கு முழுக்க முழுக்க கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட வண்ணமயமான அலங்காரப் பொருள்கள், பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முரசு அறைந்து தொடக்கி வைத்தார். முதலமைச்சர் ரங்கசாமி, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், பிளாஸ்டிக் பொம்மைகளைத் தவிர்த்துவிட்டு கைவினைப் பொருட்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் கைவினைப்பொருட்கள் துறை அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், தொழில் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் கிராமங்களின் பாதுகாவலராக விளங்கும் அய்யனாரின் கைவினைப்பொருள் சிலையை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கியதையும் தமிழிசை சவுந்தரராஜன் நினைவு கூர்ந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM