புதுடெல்லி: மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளில் 67 சதவீதம் பேர் இந்துக்கள், 19.5 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 3.5 சதவீதம் பேர் சீக்கியர்கள், 2.2 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புள்ளிவிவரத்தின்படி முஸ்லிம்கள் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீர், அசாம் சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்கள், இந்துக்கள் 41 சதவீதம் பேர் என்று தெரிய வந்துள்ளது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 3.71 லட்சம் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2.49 லட்சம் பேர் இந்துக்கள், 72,790 பேர் முஸ்லீம்கள், 13,163 பேர் சீக்கியர்கள், 8,284 பேர் கிறிஸ்தவர்கள், 2,250 பேர் மற்ற மதத்தினர்.
மேலும், 365 நாட்களுக்கு மேல் சிறைகளில் வைக்கப்படும் விசாரணை கைதிகளின் எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளது;-பிடிஐ