நான் ஒரு HIV நோயாளி. தினமும் ஏஆர்டி மாத்திரை உட்கொள்கிறேன். எனது சராசரி எடை 59 கிலோ. தற்போது 43 கிலோவாக குறைந்திருக்கிறேன். மிகவும் கவலையாக உள்ளது. எனது எடைகூடவும் உடல் பலம் பெறவும் ஏதாவது வழி சொல்லுங்கள். என்னை நம்பி ஒரு குடும்பம் உள்ளது.
– பெயர் குறிப்பிடவிரும்பாத வாசகர் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
“நீங்கள் Antiretroviral எனப்படும் ஏஆர்டி மருந்துகளைச் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டும், உங்கள் உடல் எடை இத்தனை கிலோ குறைந்திருப்பதால் நீங்கள் அவசியம் உங்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். முதலில் நீங்கள் உங்கள் ஹெச்ஐவி வைரல் லோடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து வேலை செய்கிறதா என்று தெரிய வேண்டும். ஒருவேளை உங்களுடைய ஹெச்ஐவி வைரல் லோடு அதிகமாக இருந்தால், நீங்கள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளிலிருந்து வேறு ஏஆர்டி மருந்துகளுக்கு மாற வேண்டியிருக்கும்.
இந்த மருந்துகளில் ஃபர்ஸ்ட் லைன் ஏஆர்டி, செகண்டு லைன் ஏஆர்டி, தேர்டு லைன் ஏஆர்டி என இருக்கின்றன. ஃபர்ஸ்ட் லைன் மருந்துகள் வேலை செய்யாதபட்சத்தில் செகண்டு லைனுக்கும், அதுவும் வேலை செய்யாவிட்டால் தேர்டுலைன் மருந்துகளையும் மாற்றுவோம்.
ஹெச்ஐவி வைரல் லோடு உடலில் அதிகமானால் வெள்ளையணுக்கள் குறையும். அதனால் வேறு பல நோய்கள் வரலாம். எடை குறையலாம். இதைத் தவிர ஹெச்ஐவி தொற்றுள்ள சிலர் மருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். வைரல் லோடு நல்லநிலையில் இருக்கும்.

ஆனாலும் அவர்களுக்கு ஹெச்ஐவி இல்லாத நபருக்கு வரக்கூடிய பிற பாதிப்புகளும் வரலாம். அவற்றையும் பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே உங்களுக்குப் பரிந்துரைத்த மருந்துகள் சரியாக வேலை செய்கின்றன என்று தெரிந்தால் வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பார்த்து அதற்கு சிகிச்சைகள் கொடுப்பார்கள். கவலை வேண்டாம்.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?