புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 5-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 5 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 149 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் மட்டும் 130 பேர் அடங்குவர்.
மொத்த பலி எண்ணிக்கை 5,16,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,43,762 பேர் அடங்குவார்கள்.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,997 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 58 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 29,181 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,618 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 15,77,783 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 180 கோடியே 97 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.