மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ‘ஜேம்ஸ்’ வெளியாகியிருக்கிறது. மார்கெட்டை ஓப்பன் மார்கெட், டீப் மார்கெட், டார்க் மார்கெட் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அதில் இந்த டார்க் மார்கெட் என்பது எங்கு நடக்கிறது, எப்படி நடக்கிறது ஆகிய தகவல்களைத் திரட்டுவதே மிகப்பெரிய கஷ்டம் என்ற வாய்ஸ் ஓவரில் படம் தொடங்குகிறது. அப்படியான டார்க் மார்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் அண்டர் வேர்ல்டு மாஃபியாக்களை அழிக்கும் அண்டர் கவர் ஆபரேஷன்தான் இந்த ‘ஜேம்ஸ்’.
பணத்தையும் அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் தனக்குள் வைத்திருக்கும் அண்டர் வேர்ல்டு டான்கள் சரத்குமார், ஶ்ரீகாந்த், ஆதித்ய மேனன், முகேஷ் ரிஷி ஆகியோர் ஹைதராபாத் உன்து, செகண்ட்ராபாத் என்து, காக்கிநாடா உன்து, பாவாடை நாடா என்து என்பது போல் அவரவர்களுக்குள் ஒரு எல்லை வகுத்துக்கொண்டு க்ரைம் சின்டிகேட்களை நடத்தி வருகிறார்கள். வியாபாரத்தில் டீல் ஒத்துவராமல் பிரச்னை வர, இவர்கள் ஆட்களை அவர்கள் கொல்வது, அதற்கு அவர்கள் பழி வாங்குவது என பிரச்னை வலுக்கிறது. தனக்கு எல்லாமுமாக இருக்கும் அப்பாவைக் கொன்றதற்காக ஶ்ரீகாந்த் பழிவாங்கத் துடிக்கிறார்.
பழிவாங்கலை விட பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்த ஶ்ரீகாந்த், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் புனித் ராஜ்குமாரை அழைக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் அரணாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய பாஸ் சொல்லும் வேலைகள் அனைத்தையும் பிசிரில்லாமல் கச்சிதமாக முடிக்கும் அசால்ட் சேதுவாகவும் இருக்கிறார், புனித்.
இதே அசால்ட் சேது, அட்டாக் சேதுவாக மாறினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சின்ன சின்ன ட்விஸ்டுகளுடன் மசாலா கலந்து சொல்லியிருக்கிறது ‘ஜேம்ஸ்’.
ஶ்ரீகாந்த்தின் தங்கையாக வருகிறார், நாயகி பிரியா ஆனந்த். இவருக்கும் புனித்திற்கும் காம்பினேஷன் காட்சிகள் இருந்தாலும் ரொமான்ஸ், டூயட் சாங் போன்ற விஷயங்கள் இல்லை என்பது ஆறுதல். பிரியா ஆனந்த்திற்குப் பெரிய முக்கியத்துவமும் இல்லை; முக்கியத்துவம் இல்லாமலும் இல்லை என அரை மனதாக ஒரு ரோலைக் கொடுத்திருக்கிறார்கள். ஆண்டனி… மார்க் ஆண்டனி என்று ‘பாட்ஷா’ ரகுவரன் சொல்வது போல ஆண்டனி… ஜோசப் ஆண்டனி என்று சொல்லி செம பில்டப்பாக இருக்கிறார் சரத்குமார். ‘ஐ யம் வெயிட்டிங்’ என வழக்கமான பன்ச் அடிப்பது, வேறொரு நாட்டிலிருந்துகொண்டு ஒரே போன் காலில் நினைத்ததை முடிப்பது என மாஸ் கேங்ஸ்டராக மிரட்டுகிறார். அவரின் தம்பியாக ஒரு சில காட்சிகள் வருகிறார் ‘சார்பட்டா’ வேம்புலி ஜான் கொக்கன்.
படத்தில் இத்தனை நடிகர்கள் இருந்தாலும் புனித் ராஜ்குமார்தான் ஷோ ஸ்டீலர். மாஸான என்ட்ரி, சின்னச்சின்ன ஹியூமர், டிரேட்மார்க் லெக் மூமென்ட் டான்ஸ், ஸ்டைலிஷான ஸ்டன்ட் எனப் பக்கா பேக்கேஜாக வந்து நிற்கிறார். பணக்காரன், ஏழை இறப்பில் எதுவும் வித்தியாசமில்லை என அவர் பேசும் பன்ச் வசனங்கள், ரசிகர்களை டார்கெட் செய்து அவர் பேசும் வசனங்கள் பல, என எல்லாவற்றையும் அவரின் நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும்போது மனம் கனக்கவே செய்கிறது.
படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டதால், சில காட்சிகளில் கிராஃபிக்ஸ் மூலமும், கேமரா மாயாஜாலங்கள் மூலமும் அவருக்கு உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். புனித்தின் அண்ணன் சிவராஜ்குமார் படத்தில் சிறப்புக் கெளரவ தோற்றத்தில் வந்து போகிறார். இதுபோக, ஒரிஜினல் கன்னட வெர்ஷனில் புனித் ராஜ்குமாருக்காக அவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார்.
என்னதான் கன்னட படம் என்றாலும், ஸ்டன்ட் காட்சிகள் முழுக்க ஆந்திரா காரம் அனல் வீசுகிறது. தனி ஒருவனாக புனித் துப்பாக்கி வைத்திருக்கும் அத்தனை பேரையும் வேட்டையாடுவதெல்லாம் நாம் கதையோடு ஒன்றிப் போவதைத் தடுக்கவே செய்கின்றன. அத்தனை ஆட்கள் இல்லாமல், அந்த நம்ப முடியாத சாகசங்கள் இல்லாமலே இந்தக் கதையைச் சொல்லியிருக்க முடியும் என்பதுதான் உறுத்தல். ரவிவர்மாவின் ஸ்டன்ட் கோரியோக்ராஃபி செம ஸ்டைலாக இருந்தாலும், படம் சறுக்குவது இந்த இடத்தில்தான். சரண் ராஜின் இசையில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்கள் என்றாலும் அவரின் பின்னணி இசை, மாஸ் படங்களுக்கு ஏற்ற அதிரடி சரவெடி.
புனித் ராஜ்குமாரின் இழப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. திரையில் அவர் பேசும்போது, அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற உணர்வையே கொடுக்கிறது இந்தப் படம்.
படம் முடியும்போது, அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியது முதல் அவருடைய எல்லா படங்களின் பெயர்கள், பாடிய பாடல்கள், தயாரித்த படங்கள், அவர் செய்த சமூகப் பணிகள், பெற்று விருதுகள் ஆகியவற்றைத் திரையிட்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறது படக்குழு. படத்தைத் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிட்டது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
புனித்தின் நடிப்பில் உருவான ஓர் ஆவணப்படமும், அவர் கௌரவ வேடத்தில் நடித்த மற்றொரு படமும் ரிலீஸுக்கு வெயிட்டிங் என்றாலும், அவர் நாயகனாக நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’தான். ஒரு நடிகனாக அவர் அவதரித்த இந்த சினிமா என்னும் கலை அவரை என்றும் நம் மனத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.